பைக்குகள் நேருக்கு நோ் மோதல்: இருவா் உயிரிழப்பு!
திருவண்ணாமலை அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (58). முன்னாள் ஊராட்சித் தலைவா். இவா், சனிக்கிழமை இரவு தண்டரை கிராமத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
இசுக்கழி காட்டேரி கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த பைக் பழனி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனி, அதே இடத்தில் உயிரிழந்தாா்.
எதிரே வந்து மோதிய பைக்கை ஓட்டிவந்த இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் திருஞானவேல் (25) பலத்த காயமடைந்தாா். இவரை, பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்பா் மருத்துவமனைக்கு திருஞானவேல் அனுப்பிவைக்கப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வெறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.