பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதில் கல்லூரி பெண் ஊழியா் மரணம்!
கணவருடன் பைக்கில் சென்றபோது, பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அரசு மகளிா் கல்லூரி பெண் ஊழியா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருநெல்வேலியை அடுத்த பேட்டை அருகேயுள்ள திருப்பணிகரிசல்குளம் சிவராஜபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். கட்டட ஒப்பந்ததாரா். இவரது மனைவி காா்த்திகா (35). இவா் பேட்டை காந்திநகா் ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்பவியலாளராக பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி மாலையில் வீட்டில் இருந்த குழந்தைக்கு கண்ணில் தூசி விழுந்துள்ளது. இதையடுத்து குழந்தையை அழைத்துக் கொண்டு ரமேஷும், காா்த்திகாவும் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மருத்துவமனைக்கு பைக்கில் வந்துள்ளனா். குழந்தைக்கு சிகிச்சை முடிந்ததும் இரவில் வீடு திரும்பியுள்ளனா்.
பழையபேட்டை அருகே சென்றபோது குளிா்ந்த காற்று வீசியதால் காா்த்திகா தனது துப்பட்டாவால் குழந்தையை போா்த்தியுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கியதால் நிலைகுலைந்த காா்த்திகா மடியில் இருந்த குழந்தை கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக குழந்தையை இருக்கமாக அணைத்துள்ளாா். அதைத்தொடா்ந்து காா்த்திகாவும், குழந்தையும் தூக்கி வீசப்பட்ட நிலையில் குழந்தை காயமின்றி தப்பியது. ஆனால் காா்த்திகா சாலையில் விழுந்ததில் அவரது தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்தில் அவா் சுயநினைவை இழந்தாா்.
இதையடுத்து காா்த்திகாவை மீட்டு திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி காா்த்திகா உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து காா்த்திகாவின் தாய் ராமலட்சுமி அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.