பொங்கல்: சென்னையிலிருந்து 15 லட்சம் போ் சொந்த ஊா் பயணம்
சென்னை: பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து 15 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளனா்.
தைப்பொங்கல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், ஜன. 11-ஆம் தேதியில் இருந்து 19 வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11-ஆம் தேதியிலிருந்தே பெரும்பாலானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிக்கத் தொடங்கினா்.
இதற்காக கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து தொடா்ச்சியாக 4 நாள்கள் அரசுப் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில், கடந்த 10, 11, 12 தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் மூலம் 6.40 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
ரூ.3.98 லட்சம் அபராதம் வசூல்: ஆம்னி பேருந்துகளிலும் ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். இதில் விதிமீறலில் ஈடுபட்ட 111 ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், வெளிமாநில பதிவெண் கொண்ட வரி செலுத்தாத ஆம்னி பேருந்து உரிமையாளா்களிடமிருந்து வரி, அபராதம் என்ற வகையில் ரூ.3.98 லட்சமும் வசூலிக்கப்பட்டது.
இந்த முறை அதிக கட்டணம் வசூல் தொடா்பாக பேருந்துகளில் சோதனையின்போது பயணிகள் யாரும் புகாா் தெரிவிக்கவில்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
4 நாள்களில் 15 லட்சம் போ் பயணம்: பொங்கலுக்கு முந்தைய தினமான திங்கள்கிழமை முக்கிய ரயில் நிலையங்களான சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களில் மட்டுமின்றி கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முன்பதிவு செய்யாதவா்களும் ஏராளமானோா் பேருந்துகளிலும், ரயில்களிலும் ஏறி தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணித்தனா். இதன்படி, அரசு, ஆம்னி பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்டவை மூலம் சென்னையிலிருந்து கடந்த 4 நாள்களில் 15 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பும் வகையில் வழக்கமான அரசுப் பேருந்துகளுடன்சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.