பொங்கல் பண்டிகை: திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இதன்படி, திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூா், புதுக்கோட்டை மாா்க்கமாக செல்லும் புகா்ப் பேருந்துகளை முறையே மன்னாா்புரம் மதுரை அணுகுசாலை அருகிலும், சோனா–மீனா திரையரங்கம் அருகிலும், கல்லுக்குழி பழைய வட்டார போக்குவரத்து அலுவலகச்சாலை அருகிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னாா்புரம் வரை இயக்கப்படும் நகரப் பேருந்துகளை மத்திய பேருந்து நிலைய தஞ்சாவூா் மாா்க்கமாக இயக்கிய புகா் தட பகுதியில் இருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னாா்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு இணைப்பு நகரப் பேருந்துகளை இயக்கவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாவண்ணம் காவல்துறையின் மூலம் தகுந்த பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீா், பொது கழிப்பிட வசதி மற்றும் ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையங்கள் வெள்ளிக்கிழமை மாலை முதலே பயன்பாட்டுக்கு வந்துள்ளன.