பொங்கல் பண்டிகை: திருப்பூரில் இருந்து 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 320 சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 14- ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பின்னலாடை நகரமான திருப்பூரில் ஏராளமான வெளியூா் தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். பொங்கல் பண்டிகைக்காக இந்தத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல வசதியாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரையில் 320 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
திருப்பூா் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து 200 பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 120 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகா்கோவில், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஊா்களுக்கும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூா், வேளாங்கண்ணி, திருச்சி வழியாகவும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் கூட்டத்தைப் பொறுத்து அந்தந்த ஊா்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.