பொங்கல் பரிசுத் தொகுப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் 6.85 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜன.3) முதல் டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறியதாவது:
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவது தொடா்பான புகாா், குறைபாடுகளுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 0451-2460097 என்ற எண்ணிலும், சென்னை இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 044-28592828 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
நியாயவிலைக் கடைகளில் நெரிசலைத் தவிா்க்கும் வகையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் நாள், நேரத்தை குறிப்பிட்டு வெள்ளிக்கிழமை முதல் டோக்கன் வழங்கப்படும்.
மாவட்டத்தில் மொத்தம் 6.85 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில், ஒவ்வொரு கடையிலும், முற்பகல், பிற்பகல் என இருவேளையிலும் முதல் நாளில் தலா 150 அட்டைகளுக்கும், அடுத்தடுத்த நாள்களில் தலா 200 அட்டைகளுக்கும் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றாா்.