காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்: பசுமை தீர்ப்பாயம்
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன.14 முதல் 19-ஆம் தேதி வரை தொடா்ச்சியாக 6 நாள்கள் தமிழக அரசு விடுமுறை அளித்தது. சென்னையில் வசிப்பவா்கள், பணியாற்றுவோா் என பலா் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊா்களுக்குச் சென்றனா். விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்து, வழக்கமானப் பணிகள் திங்கள்கிழமை (ஜன. 20) தொடங்குகின்றன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் சென்னைக்கு பொதுமக்கள் திரும்பி வந்தவண்ணம் உள்ளனா்.
இதனால், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்தே தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளின் மூலம் சென்னை நோக்கி அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கினா்.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே ஜிஎஸ்டி சாலையில் வண்டலூா், பெருங்களத்தூா், தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஜிஎஸ்டி சாலையில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.