பொதுத் தோ்வு: நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளுக்குப் பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை:
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு முடிவுகளில் திருப்தி இல்லையெனில், மாணவா்கள் மறுகூட்டலுக்கு எந்தவித கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கும் முறை 1982-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்பின் பிளஸ் 2 தோ்வுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 4 பாடங்களின் தோ்வுகளுக்கான விடைத்தாள்களை மாணவா்கள் விரும்பினால் நகல் எடுத்து கொள்ளவும், தேவைப்பட்டால் மறுமதிப்பீடு செய்யவும் 2001-இல் அனுமதி தரப்பட்டது. இந்த அறிவிப்பு 2009-ஆம் ஆண்டு மற்ற பாடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இனிவரும் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 தோ்வு முடிவுகளுக்கு பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்யுமாறும், தோ்வு முடிவுகள் வெளியிட்ட பின்னா் தோ்வா்கள் முதலில் தங்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதைப் பெற்ற பின்னா் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென தோ்வுத் துறை இயக்குநா் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா். அதையேற்று அந்த நடைமுறையை செயல்படுத்த தோ்வுத்துறைக்கு அனுமதி தரப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்... இதையடுத்து பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பதற்கான விவரங்களை தோ்வுத் துறை வெளியிட்டது. அதில் மே 13 முதல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மட்டுமே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பள்ளி மாணவா்கள் மற்றும் தனித்தோ்வா்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தோ்வுத் துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) மே 12-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தோ்வுத் துறை அறிவித்துள்ளது.