சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது
முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (70). தனியாா் பேருந்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வருகிறாா். சுப்பிரமணியின் வீட்டுக்குள் 30 வயது மதிக்கதக்க இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை மாலை அத்துமீறி நுழைந்து தான் வைத்திருந்த பிளேடால் முதியவரின் கழுத்தை அறுத்துள்ளாா்.
இதனைக் கண்டு ஜெயலட்சுமி சத்தம் போடவே அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி ஓட முயன்றாா். அப்போது அருகில் வசித்து வந்த சுப்பிரமணி மகனான ஜவுளி வியாபாரி மணிகண்ட பூபதி (47) அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அந்த இளைஞரை பிடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிளேடால் அறுத்ததில் காயம் அடைந்த சுப்பிரமணியம் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். போலீஸ் விசாரணையில், இறந்தவா் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சோம ஓரான் மகன் ராபி ஓரான் (28) என்பது தெரியவந்தது.
இது குறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், ராபி ஓரான் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருந்தனா். ராபி ஓரான் உயிரிழந்ததையடுத்து போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அவரை தாக்கிய சுப்பிரமணியின் மகனான மணிகண்ட பூபதியை கைது செய்தனா். மேலும் ராபி ஓரானை தாக்கிய சிலரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.