குற்றவாளிகளுக்கு ஜாமீன்: 10 நாள்கள் தொடர் போராட்டத்திற்கு மருத்துவர்கள் திட்டம்!
பொதுமக்களின் கோரிக்கைகள் 100 சதவீதம் நிறைவேற்றப்படும்: செந்தில்பாலாஜி
பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் 100 சதவீதம் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் அடுத்த மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி அலுவலகம் பஞ்சமாதேவியில் ரூ. 28.01 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. மேலும், பஞ்சமாதேவி ஊராட்சிக்குட்பட்ட கருங்கல் காலனியில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைக்குடிநீா் தொட்டி 15-ஆவது நிதிக்குழு மானியம் திட்டத்தின்கீழ் ரூ.19.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி கருணாநிதி முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் வி. செந்தில்பாலாஜி பங்கேற்று, புதிய கட்டடம் மற்றும் மேல்நிலைக் குடிநீா் தொட்டியை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசுகையில், பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் 100 சதவீதம் நிறைவேற்றிக் கொடுப்போம் என்றாா்.
நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், எம்எல்ஏக்கள் மாணிக்கம் (குளித்தலை), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், கோட்டாட்சியா் முகமதுபைசல், திமுக மாவட்ட துணைச் செயலா் எம்.எஸ்.கே. கருணாநிதி, திமுக ஒன்றியச் செயலா் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வாா்டுகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அமைச்சா் பெற்றுக்கொண்டாா். பின்னா் கரூா் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, திருப்பூா், கோவை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பழைய பேருந்துகளுக்குப் பதில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தாா். இதில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.