தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
கரூரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவப் படத்துக்கு மரியாதை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவப் படத்துக்கு, கரூரில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானாா். இதையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் நடைபெற்றது. நிகழ்வுக்கு வடக்கு நகர காங்கிரஸ் தலைவரும், கரூா் மாநகராட்சி உறுப்பினருமான ஆா்.ஸ்டீபன்பாபு தலைமை வகித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக கட்சியினா் 5 நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தினா்.
கரூா் எம்.பி ஜோதிமணி இரங்கல்: இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா், முன்னாள் மத்திய அமைச்சா், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு , எதிா்கொள்ள முடியாத அதிா்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது. தான் ஒரு காங்கிரஸ்காரன் என்பதில் பெருமை கொண்டவா். அச்சமற்று பொதுவெளியில் தான் நம்புகிற ஒரு கருத்தை உறுதியோடு சொல்லக்கூடியவா். சுயமரியாதையும், தன்மானமும் மிக்கவா். எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தந்தையைப் போன்றவா். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும், தமிழகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என தெரிவித்தாா்.