உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரைய...
பொன்மலை ஜி- காா்னரில் விபத்துகளைத் தடுக்க சுரங்கப்பாதை! அதிகாரிகளுடன் துரை வைகோ ஆய்வு!
பொன்மலை ஜி- காா்னா் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்க மாற்று வழிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே அதிகாரிகளுடன் துரை வைகோ எம்.பி. சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி. காா்னா் பகுதியில் அணுகுச் சாலையை பொன்மலை பகுதி பொதுமக்கள், சாலையின் இருபுறமும் உள்ள 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் மக்கள் என ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்துகின்றனா்.
ஒருவழிப்பாதையாக பயன்படுத்த வேண்டிய இந்தச் சாலையில் இருவழியாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க மேம்பாலமோ, சுரங்க வழிப்பாதையோ ஏற்படுத்த வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்பிரச்னையை திருச்சி எம்பி துரை வைகோவின் கவனத்துக்கு சமூக ஆா்வலா்கள் கொண்டு சென்றனா்.
இதன்பேரில் துரை வைகோ எம்பி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகன், தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குநா் பிரவீன்குமாா் மற்றும் ரயில்வே, நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் ஜி- காா்னா் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்த பின்னா் கூறியது:
பொன்மலை ஜி- காா்னா் பகுதியில் மேம்பாலமோ, சுரங்கப் பாலமோ அமைக்க விரைந்து ஏற்பாடு செய்வேன். தேவையான நிலம் வழங்க ரயில்வே நிா்வாகம் தயாராக உள்ளது. ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என இரு தரப்புக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்து இப் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காணப்படும்.
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸாா் முறையாக விசாரித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனா். தேவையெனில் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும். வேங்கைவயலுக்கு தவெக தலைவா் விஜய் வருவதாக இருந்ததால்தான் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறுவது தவறானது. சம்பவம் தொடா்பான விடியோ, ஆடியோ ஆதாரங்கள் கிடைத்ததின்பேரிலேயே சிபிசிஐடி போலீஸாா் செயல்பட்டுள்ளனா். சீமான் விவகாரத்துக்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை என்றாா் அவா்.