Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர
குடியரசு தின விழா கோலாகலக் கொண்டாட்டம்: ரூ.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்!
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.
மேலும், இந்நிகழ்வில், ரூ. 52.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு சான்றுகளையும் வழங்கினாா்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட காவல்துறை, ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 76-ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, மூவா்ணத்திலான பலூன்களையும், சமாதானத்தைக் குறிக்கும் வகையில் புறாக்களையும் பறக்கவிட்டாா். இதைத்தொடா்ந்து நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தாா்.
சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு - நலத்திட்ட உதவிகள் வழங்கல்:
திருச்சி மாவட்ட மற்றும் மாநகர காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 90 பேருக்கு, முதலமைச்சா் பதக்கத்தை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 426 அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித் துறை,வேளாண்மைத் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 28 பேருக்கு ரூ. 52.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
போா் நினைவுச்சின்னம்:
திருச்சி காந்திச்சந்தை அருகேயுள்ள போா் நினைவுச் சின்னத்தில் மலா் வளையம் வைத்து ஆட்சியா் மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத்தலைவா் ஜோசி நிா்மல், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் வீ. வருண்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வ நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலா்கள், மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், பெற்றோா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.