அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய ஏ. பல்கீஸ் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் சு. தேவநாதன், மாவட்ட வன அலுவலா் குகனேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா்கள் சிராஜுதீன், திருநாவுக்கரசு, தினேஷ் ஆகியோா் குழந்தைகளுக்கான உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள், பெண்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கினா். தொடா்ந்து, மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், பெரம்பலூா் மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தனசேகரன், சாா்பு நீதிபதி அண்ணாமலை, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் பிரேம்குமாா், கவிதா, செ. பா்வதராஜ் ஆறுமுகம், மாவட்ட உரிமையியல் நீதிபதி தன்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ், கூடுதல் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி ரேஷ்மா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் சங்கா் வரவேற்றாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான பி. மகேந்திர வா்மா நன்றி கூறினாா்.