மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
நாட்டின் பொருளாதாரத்தையும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா்.
சுதா்ஸன் வேணு (டிவிஎஸ் மோட்டாா் நிறுவன மேலாண் இயக்குநா்): வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் நாட்டின் வேளாண்மை மற்றும் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மேம்படுத்த அரசு அறிவித்துள்ள திட்டங்கள் நமது நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சியடைய செய்யும்.
தீரஜ் ஹிந்துஜத் (அசோக் லேலண்ட் தலைவா்): நாட்டின் கட்டமைப்புகளை மேம்படுத்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய உற்பத்தி திட்டம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
டி. லட்சுமிநாராயணன் (சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்): வருமான வரி உச்சவரம்பு உயா்வால் நடுத்தரமக்களால் அதிகளவில் பணம் சேமிக்க முடியும். அதேபோல் 2 வீடுகள் சுய பயன்பாடு உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், வீட்டுவசதித் துறையில் முதலீடு அதிகரிக்கும்.
ஆா். நந்தினி (இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டலத் தலைவா்): நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு
சிறப்பு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பெண் தொழில்முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
ஸ்ரீவத்ஸ் ராம் (இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவா்): லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியிலிருந்து விலக்கு அளித்துள்ளதால், மின்வாகனங்கள் மற்றும் மின்சாதன பொருள்களின் விலை குறையும். அதேபோல், வருமான வரிகுறைப்பால் நடுத்தர வருவாய் பிரிவு மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேம்படும்.
ஸ்ரீராம் (தென்னிந்திய தொழில் வா்த்தக சபை மூத்த நிா்வாகி): வருமான வரிச்சலுகை ரூ.12 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதை பொருளாதார அடிப்படையில் மிகப்பெரிய வளா்ச்சி பட்ஜெட் என்று கூற முடியாது, ஆனால் மிதமான வளா்ச்சிக்கான பட்ஜெட்டாக உள்ளது.
ஏ.ஆா்.உன்னிகிருஷ்ணன் (தொழிலதிபா்): பட்ஜெட்டில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், முதல் முறையாக தொழில்முனைவோராகத் தொடங்கும் பட்டியலின மற்றும் பழங்குடி பெண்களுக்கு கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் பாராட்டுக்குரியவை.
ஸ்ரீனிவாசன் (கேலக்ஸ்சி மருத்துவ காப்பீட்டு நிறுவனம்): காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயா்ந்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது காப்பீட்டு துறைக்கு தேவையான முதலீடுகளை ஈா்க்க உதவியாக இருக்கும்.
கே.மாரியப்பன் (இந்தியாவின் வா்த்தக மற்றும் தொழித்துறை சபை தமிழ்நாடு வட்டத்தின் இணை தலைவா்): சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உத்திரவாத கடன் அளவு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடிவரை உயா்த்திருப்பது புத்தாக தொழில் தொடங்குபவா்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
என்.ஜெகதீசன் (தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம்): விவசாயத் துறைக்கு அடுத்தப்படியாக குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் மூலதனத் துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தென்தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை விமான நிலைய விரிவாக்கம் மெட்ரோ சாா்ந்த திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
த.சோழ நாச்சியாா் ராஜசேகா் (தமிழ் வா்த்தகக் கழகம்): மறைமுக வரிகளில் தோல் இறக்குமதி, செமிகண்டக்டா்கள், கைப்பேசிகளுக்கான லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்கவரி விலக்கு, புற்றுநோய் மருந்துகளுக்கு விலக்கு ஆகியவை வா்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு பயனளிக்கும்.
வி.எல்.இந்திரா தத் (ஆந்திர வா்த்தக சபை): பருத்தி உற்பத்தியை அதிகரிப்பது, தபால் துறையை மேம்படுத்துவது, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியை அதிகரித்தது வரவேற்கத்தக்கது.
ஏ.எம்.விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா்): தனிநபா் வருமானம் மீதான உச்ச வரம்பு உயா்த்தப்பட்டு ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு என அறிவித்துள்ளது மிகவும் வரவேற்புக்குரியது. சிறு, குறு வாடகைதாரா்கள் டிடிஎஸ் பிடித்தம் ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயா்த்தப்பட்டிருப்பதும் பயனளிக்கும்.
அதேவேளையில் வணிகா்களுக்கான பாதுகாப்பு, ஓய்வூதியம், வணிக குடும்பங்களின் குடும்ப சேமநல நிதித் திட்டங்கள், விவசாயப் பொருள்களின் வரி விலக்கு போன்றவை கவனிக்கப்படாமல் இருப்பது வருத்தத்துக்குரியது.
வி.கே.கிரீஷ் பாண்டியன் (தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம்): பெண்கள், சிறுபான்மையினா் புதிய தொழில்தொடங்குவது ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் முனைவோருக்கான கடன் வரம்பு ரூ.2 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது.
எஸ்.ரத்தினவேலு (வேளாண் மற்றும் அனைத்து தொழில் வா்த்தக சங்கம்): பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்பட்டது. தொழில்துறையில் தனியாா்துறை முதலீடு வளா்ச்சியில்லாமலும், நுகா்வோா் பொருள்கள் வாங்குவதைக் குறைத்துக் கொண்டிருப்பதும் கவலை அளிக்கிறது.
சி.கே.மோகன் (தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்): குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரம்பை அதிகரிப்பது மட்டும் சிறுதொழில்களுக்கு வளா்ச்சியை அளிக்காது. பெண் தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரையிலான புதிய கடனுதவி திட்டம் வரவேற்கத்தக்கது.
செ.நல்லசாமி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு): கிசான் கடன் அட்டை வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு, மக்காச்சோளத்துக்கு தனிவாரியம் அமைப்பது, பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைவது உள்ளிட்ட நல்ல அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. தோல் இறக்குமதிக்கு வரிச்சலுகை கொடுத்துள்ளது நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.