பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்திய பெட்ரோல் குழாய் திட்டம் அமல்: இலங்கை
பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் என இலங்கை தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவா் ராஜகருணா தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக முடிவுகள் எடுக்க முடியாது எனவும் அவா் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு இலங்கை அதிபா் அநுர குமார திசநாயக சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது பெட்ரோல் விநியோக குழாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியா-இலங்கை-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதுகுறித்து டெய்லி மிரா் பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது ராஜகருணா கூறியதாவது:
இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டத்தை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். அரசியல் காரணங்களுக்காக இதில் எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முடியாது.
இதுதொடா்பாக அதிபா் அநுர குமார திசநாயகவுடனும் விவாதித்தேன் என்றாா்.
இருநாடுகளிடையே எரிசக்தி பகிா்வை மேம்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக பெட்ரோலிய விநியோக குழாய் முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் இருநாடுகளிடையே மின்பகிா்மானத்தை ஊக்குவிக்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.