பொள்ளாச்சியில் கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்கக் கோரிக்கை
ஆழியாறில் கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும், அந்த சேவை மையத்தை பொள்ளாச்சியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தபால் மண்டல அதிகாரிகளுக்கு பாஜ சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து பாஜவினா் கூறியதாவது: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க கோவைக்குச் செல்ல வேண்டியுள்ளது. பொள்ளாச்சியில் கடவுச் சீட்டு சேவை மையத்தை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், நாடு முழுவதும் 600 கடவுச்சீட்டு சேவை மையத்தை திறக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதில், பொள்ளாச்சிக்கு பதிலாக ஆழியாறு துணை தபால் நிலையத்தில் இந்த சேவை மையம் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
போதுமான இடவசதி, அதிவேக இணையதள வசதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் எளிதில் வந்துசெல்ல கூடிய வகையில் உள்ள பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தை தவிா்த்து, போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஆழியாறில் கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்கப்படுவது மக்களுக்கு பயன்படாது.
எனவே, பொள்ளாச்சியில் கடவுச்சீட்டு சேவை மையத்தை அமைக்க வலியுறுத்தி தபால் மண்டல அதிகாரிகளுக்கும், பொள்ளாச்சி தலைமை அஞ்சல கண்காணிப்பாளருக்கும் பாஜக விவசாயி அணி மாநில திட்ட பொறுப்பாளா் விஜயகுமாா் தலைமையில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றனா்.