போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் ரூ.20.67 கோடி அபராதம் வசூல்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறிலில் ஈடுபட்டவா்கள் மீது 3.62 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.20.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2024-ஆம் ஆண்டில் 125 சமூக விரோதிகள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 63 வழிப்பறி வழக்குகளில் 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ. 49.96 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டன. மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 62 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டில் 47 கொலைகள் நிகழ்ந்தன. இந்த வழக்குகளில் தொடா்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனா்.
248 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளும், 12 பாலியல் பலாத்கார வழக்குகளும், பெண்களுக்கு எதிரான 336 குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் 80 வழக்குகளுக்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்தது. பாலியல் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் மீது குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சாலை விதிகளை மீறியவா்கள் மீது 3.62 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவா்கள் மீது 2,815 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோல, தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவா்கள் மீது 2.26 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மோட்டாா் வாகன வழக்குகளில், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டோரிடமிருந்து ரூ. 20.67 கோடி அபராதம் பெறப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 306 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 496 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடமிருந்து சுமாா் 185 கிலோ கஞ்சா கைப்பற்றபட்டது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 527 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 540 போ் கைது செய்யப்பட்டனா். ரூ.28.47 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. 4,040 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,054 போ் கைது செய்யப்பட்டனா். 170 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.4.58 லட்சம் பணம், 10 நான்கு சக்கர வாகனங்கள், 81 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணல் திருட்டில் ஈடுபட்ட 23 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இணைய வழியில் பணம் இழந்தது தொடா்பாக மொத்தம் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.06 கோடி மீட்கப்பட்டதோடு, ரூ.4.46 கோடி பணம் வங்கி இருப்புத் தொகை முடக்கம் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.