போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: ஆட்சியா்
போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், நடைபெற்ற போதைப் பொருள்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தொடங்கிவைத்து பேசியது: போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது. குடும்பத்தினா், நண்பா்களுடன் ஒருங்கிணைந்து போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் முன்னின்று செயல்பட வேண்டும்.
போதைப் பழக்கத்துக்கு உள்ளானவா்களை மீட்டெடுத்து, அவா்களை நல்வழிப்படுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. போதைப் பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா். முன்னதாக, போதைப் பொருள்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் கல்லூரி மாணவா்கள் எடுத்துக் கொண்டனா். இதுதொடா்பாக நடைபெற்ற பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், துணை ஆட்சியா் (கலால்) சங்கா், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பவானியா, நன்னிலம் டிஎஸ்பி தமிழ்மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.