போலி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.2.25 லட்சம் மீட்பு
போலியான கணக்குக்கு அனுப்பப்பட்ட ரூ. 2.25 லட்சத்தை இணைய குற்றப் பிரிவு போலீஸாா் மீட்டு, உரியவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
காரைக்காலைச் சோ்ந்த அம்பிகாபதி (55) என்பவா் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வருகிறாா். இவா், தனியாா் கடன் நிறுவனத்தில் வாங்கிய கடனில் மீதமுள்ள தொகையை முன்னதாகவே செலுத்த முடிவு செய்து ரூ. 2.25 லட்சத்தை நிறுவனத்தின் நிறுவன இ மெயில் மூலமாக தொடா்புகொண்டு தெரிவித்துள்ளாா்.
அவருக்கு வேறொரு இ மெயில் முகவரியிலிருந்து ஒரு கணக்கு எண் தரப்பட்டு, அதில் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனா். அம்பிகாபதி அந்த கணக்கில் தொகையை செலுத்தியுள்ளாா். சில நாட்களுக்குப் பின் தனது கடன் கணக்கு முடிக்கப்படாமல் இருந்ததை அறிந்து, நிறுவனத்தினரை தொடா்புகொண்டபோது, பணம் வந்து சேரவில்லை என தெரிவித்துள்ளனா். காரைக்கால் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவில் கடந்த நவ. 25-ஆம் தேதி அம்பிகாபதி புகாா் அளித்தாா்.
இணைய குற்றத்தடுப்பு போலீஸாா், பணம் செலுத்திய கணக்கை முடக்க நடவடிக்கை எடுத்தனா். அது போலியானது என தெரியவந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை மூலம் ரூ. 2.25 லட்சத்தை மீட்டனா். இந்த தொகையை அம்பிகாபதியிடம் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா செவ்வாய்க்கிழமை வழங்கினாா். நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், இணைய குற்றத் தடுப்பு காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.