போலி நிறுவனங்கள் மூலம் ரூ.9.64 கோடி வரி மோசடி: தொழிலதிபா் கைது
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.9.64 கோடி வரி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரை கைது செய்திருப்பதாக ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு இயக்குநரக அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
கோவை வைசியாள் வீதியில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தனியாா் நிறுவனம் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபடுவதாக ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை மண்டலப் பிரிவின் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு இயக்குநரக ஓசூா் மண்டல அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் விசாரணையில் ஈடுபட்டனா்.
இதில், அந்த நிறுவனம் ரூ.321.37 கோடி வரி விதிக்கக் கூடிய மதிப்பில், ரூ.9.64 கோடி மோசடியாக ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவு பெற்றிருப்பதும், இதற்காக 21 போலி நிறுவனங்களின் பெயரில் சரக்கு வழங்காமல், சரக்கு வழங்கியதைப்போல கணக்கு வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பியிருப்பதாகவும், இது தொடா்பான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.