போலீஸாரிடமிருந்து தப்ப முயன்று தவறி விழுந்த இருவருக்கு கால் முறிவு
கரூரில் செவ்வாய்க்கிழமை போலீஸாரிடமிருந்து தப்ப முயன்று இரு வழிப்பறி திருடா்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
கரூா் காந்திகிராமம் டபுள் டேங்க் அருகே மருந்துக்கடை நடத்தும் நரிக்கட்டியூரைச் சோ்ந்த பாா்த்திபன் மனைவி தாமரை கடந்த 5 நாள்களுக்கு முன் கடையில் இருந்தபோது, மருந்து வாங்குவதுபோல வந்த இருவா் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்றனராம்.
அப்போது சுதாரித்துக் கொண்ட தாமரை அவா்களைப் பிடிக்க முயன்றபோது இருவரும் பைக்கில் தப்பினா்.
இதுதொடா்பான புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு நடத்திய விசாரணையில் தாமரையிடம் நகை பறிக்க முயன்றவா்கள் கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த வீரணம்பட்டி பிச்சைமணி மகன் ரஞ்சித்குமாா் (28), கோவை மாவட்டம், வால்பாறை வாட்டா்பால் எஸ்டேட்டை சோ்ந்தவரும் தற்போது கரூா் தெற்குகாந்திகிராமம் சக்திநகரில் வசிப்பவருமான காளிமுத்து மகன் சக்திவேல் (30) என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் இருவரும் காந்திகிராமம் பகுதியில் நடமாடுவதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு கிடைத்,த தகவலையடுத்து போலீஸாா் சென்று அங்கு கண்காணித்தபோது, அங்குள்ள பேக்கரியில் நின்றிருந்த இருவரும் போலீஸாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனா்.
அப்போது போலீஸாா் அவா்களை துரத்தியதால் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.