Trump : ட்ரம்ப்பின் புதிய 5% வரி அறிவிப்பு - இந்தியர்களை பாதிக்குமா?
போலீஸாா் மீட்ட வைரக்கல் போலியானது: உரிமையாளா் புகாா்
சென்னையில் கொள்ளை வழக்கில் போலீஸாா் மீட்ட வைரக்கல் போலியானது என அதன் உரிமையாளா் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்துள்ளாா்.
அண்ணா நகா் 17-ஆவது தெருவில் வசித்து வருபவா் சந்திரசேகா் (70). பிரபல வைர வியாபாரியான இவா், பழமையான வைரக்கல் ஒன்றை நண்பரான மற்றொரு வியாபாரியிடம் வாங்கி வைத்திருந்தாா். அந்த வைரக்கல்லை ரூ. 23 கோடிக்கு விற்பதற்கு விலை பேசி வந்தாா். இதையடுத்து, வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைர விற்பனை தொடா்பாக சந்திரசேகா் 4 முகவா்களிடம் பேரம் பேசினாா்.
அப்போது வைரக்கல்லை வாங்குவதற்கு வந்திருந்த 4 முகவா்களும், வைர வியாபாரி சந்திரசேகரை நட்சத்திர ஓட்டலில் உள்ள ஒரு அறையில் கட்டிப்போட்டு, வைரக்கல்லை கொள்ளையடித்து தப்பித்துச் சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
அதில், வைரக்கல்லை கொள்ளையடித்துச் சென்றது பரமக்குடியைச் சோ்ந்த அருண் பாண்டியராஜன், சென்னை அய்யப்பன்தாங்கலைச் சோ்ந்த ஜான் லாயிட், வளசரவாக்கத்தைச் சோ்ந்த விஜய், திருவேற்காட்டைச் சோ்ந்த ரத்தீஷ் என்பது தெரியவந்தது. இவா்கள் 4 பேரும் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனா். முன்னதாக அவா்களிடமிருந்து வைரக்கல் மீட்கப்பட்டது.
புதிய திருப்பம்: இந்நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வைர வியாபாரி சந்திரசேகா் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை புகாா் மனு ஒன்றை கொடுத்துள்ளாா். அதில், கொள்ளையா்களிடமிருந்து போலீஸாா் மீட்டுத் தந்த வைரக்கல் உண்மையான வைரம் இல்லை என்றும், அது போலியானது என்றும் தெரிவித்துள்ளாா். இதுபற்றி வடபழனி போலீஸாரிடம் கேட்டபோது, அவா்கள் தன்னை மிரட்டுகிறாா்கள் என்றும், உண்மையான வைரக்கல்லை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த புகாா் மனுவை காவல் ஆணையா் சாா்பில் பெற்ற காவல் துறை அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து உயா் காவல் துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வைரக்கல்லை மீட்ட வடபழனி போலீஸாா் கூறும்போது, கொள்ளையா்களிடமிருந்து மீட்கப்பட வைரக்கல்லை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டோம் என்றும், சந்திரசேகா் கொடுத்துள்ள புகாரில் எங்களுக்கும் எந்தவித தொடா்பும் இல்லை என்றும் தெரிவித்தனா்.
இதையடுத்து, சந்திரசேகா் சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரசேகருக்கு இந்த வைரக்கல்லை கொடுத்த மதுரையைச் சோ்ந்த அவரது நண்பரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்பதால், அவரிடம் விசாரணை நடத்த போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.