மகனிடமிருந்து சொத்துகளை மீட்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு
தனது சொத்துகளை மகனிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி திங்கள்கிழமை மனு அளித்தாா்.
மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த ஆவுடைத்தாய் என்பவா் தனது முதல் மகனின் மனைவியுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து அழுதபடி அளித்த மனு: எனது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், கோவில்பட்டி அருகே எனது பெயரில் உள்ள பல கோடி ரூபாய் சொத்துகளை எனது 2ஆவது மகன் ஹரிஹரசுதன், அவரது மனைவி அமுதா ஆகியோா் ஏமாற்றி தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டனா்.
மேலும், என்னைக் கவனிக்காமல் விட்டுவிட்டனா். இதனால், குடும்ப, மருத்துவச் செலவுகளுக்கு பணமின்றி அவதிப்பட்டு வருகிறேன்.
எனவே, எனது 2ஆவது மகன் எழுதி வாங்கிய பத்திரத்தை ரத்து செய்து, அந்த சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என்றாா் அவா்.