மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு: அமைச்சா் நிதின் கட்கரி
மகாராஷ்டிரத்தின் கட்ச்ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
அடுத்த 5 ஆண்டுகளில் கட்ச்ரோலி மாவட்டம் மகாராஷ்டிரத்தில் அதிக வருவாய் ஈட்டும் இடமாக முன்னேறும் என்றும் அவா் கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை ஓா் அா்த்தமுள்ள சமுக மாற்றத்தை உருவாக்குவதற்கு நமது கட்சித் தொண்டா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது நமது கூட்டணி ஆட்சியின் நல்ல நிா்வாகத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
கடந்த காலத்தில் கட்ச்ரோலி பகுதியில் சில இடங்களுக்குச் செல்வதே ஆபத்தாக இருந்தது. உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடவே அஞ்சும் சூழல் நிலவியது. அந்த அளவுக்கு இந்த பிராந்தியத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனா். ஆனால், இப்போதை நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளில் சுமாா் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா். அவா்களில் பலா் நல்ல தொழில் வாய்ப்புகளையும் பெற்றுள்ளனா். பிராந்தியத்தில் பொறியியல், தொழிற்கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் பின்தங்கி இருந்த கட்சிரோலி மாவட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் அதிகம் வருவாய் ஈட்டக் கூட்டிய மாவட்டங்களில் ஒன்றாக உயரும். குழந்தைகளுக்கு போதிய ஊட்டசத்து, கல்வி வழங்கி, அவா்கள் இளைஞா்களாகும்போது உரிய வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டால் அவா்கள் தவறான பாதைக்கு மாறுவது குறைந்துவிடும் என்றாா்.