கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படு...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்: விறுவிறுப்பு... ஆர்வத்துடன் வாக்களித்த பாலிவுட், அரசியல் பிரபலங்கள்..!
மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதே போன்று ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு இன்று இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தான் மிகவும் அனல் பறக்கும் வகையில் இருந்தது. தேர்தலையொட்டி மகாராஷ்டிரா முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இன்று காலை தேர்தல் தொடங்கியதும். துணை முதல்வர் அஜித்பவார் இன்று காலையிலே தனது சொந்த ஊரான பாராமதியில் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், மஹாயுதி கூட்டணி ஆட்சியமைக்கும். பாராமதி மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் காலையிலேயே வாக்களித்தனர்.
மக்கள் ஜனநாயக திருவிழாவில் திரளாக பங்கேற்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் அக்ஷய் குமார் மும்பை பாந்த்ராவில் காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்துவிட்டு சென்றார்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டி முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சகோதரர் பிரகாஷ் ஷிண்டே தானேயில் உள்ள சிவன் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜை செய்தார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மும்பை பாந்த்ராவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது குடும்பத்தோடு சென்று வாக்களித்தார். பின்னர் கூடி நின்ற நிருபர்களிடம் பேசிய சச்சின் தெண்டுல்கர் வாக்களிப்பது நமது பொறுப்பு என்று தெரிவித்தார்.
சரத்பவார் தனது மனைவியோடு பாராமதியில் வாக்களித்தார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், "மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. யார் ஆட்சியமைப்பார்கள் என்று 23ம் தேதிக்கு பிறகு தெரிய வரும்" என்று தெரிவித்தார்.
சுப்ரியா சுலே தனது குடும்பத்தோடு வந்து வாக்களித்துவிட்டு அளித்த பேட்டியில், "பா.ஜ.கவினர் வெளியிட்டு இருக்கும் கிரிப்டோகரன்சி கரன்சி ஊழல் தொடர்பான ஆடியோவில் இருக்கும் சத்தம் என்னுடையது கிடையாது" என்று தெரிவித்தார்.
நடிகர் சோனுசூட் மும்பையில் வாக்களித்த பிறகு அளித்த பேட்டியில், "வாக்களிப்பது ஒவ்வொருவரது கடமை" என்று தெரிவித்தார்.
மும்பையில் தேர்தல் எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடக்க 30 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா முழுக்க காலை 9 மணி வரை 6.61 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது. மும்பையில் 6.25 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கியது. இத்தேர்தலில் 1.23 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் 528 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா, எதிர்க்கட்சி தலைவர் அமர் குமார் ஆகியோரும் இன்று தேர்தல் நடக்கும் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...