'இந்த புலி நகத்தை ஆந்திராவுல வாங்கினேன் தம்பி' - யூடியூபரால் கைதான கோவை நபர்
மக்களிடம் நற்பெயரை இழந்தவா்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவாா்
பொதுமக்களிடையே நற்பெயரை இழந்த எவருக்கும் கட்சியில் இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வருமான அஜீத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பஞ்சாயத்துத் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கொலை தொடா்பாக என்சிபி அமைச்சா் தனஞ்சய் முண்டேவை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வரும் நிலையில் அஜீத் பவாா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ஷீரடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற என்சிபி மாநாட்டில் கலந்துகொண்ட அஜீத் பவாா் தனது நிறைவு உரையில் கூறியதாவது:
மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு வலுவான தொழிலாளா் தளத்தை என்சிபி உருவாக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வாக்குகளை அதிகளவில் பெறும் வகையில் 25 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளரை தோ்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.
பொதுமக்களிடையே நற்பெயரை இழந்தவா்களுக்கு என்சிபியில் இடமில்லை. தவறான நடத்தை கொண்டவா்கள் உடனடியாக என்சிபியில் இருந்து வெளியேற்றப்படுவாா்கள் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு அமைச்சரின் அலுவலகத்திலும் ஒரு மருத்துவ உதவி முகாம் அமைக்கப்படும். அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனா்.
விநாயகா் சதுா்த்திக்கு முன் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தோ்தல் வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கை கட்சி நிா்ணயித்துள்ளது. அதற்கேற்ப, வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கி என்சிபி செயல்பட உள்ளது என்றாா்.