திடீரென ஓய்வை அறிவித்த Ashwin - பின்னணி என்ன? | Ashwin Retirement | BCCI | Austr...
'மக்களைப் பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்' - முதல்வர் ஸ்டாலின்!
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடிவில், நேற்று(செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.
இந்தநிலையில், அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி இன்று போராட்டம் நடத்தினர். இதனால் இன்று அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இதையும் படிக்க | அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்! - கார்கே
நாட்டு மக்களிடம் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,
'அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!' என்று அமித் ஷாவை மறைமுகமாக விமரிசித்துப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அம்பேத்கருக்கு அவமதிப்பு: நாடாளுமன்றத்தில் போராட்டம்.. அவைகள் ஒத்திவைப்பு!!