கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் வைபவ் சூர்யவன்ஷி!
மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் வழங்கினாா்.
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னா் அவா் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், பெண்களின் முன்னேற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 381 மனுக்கள் வரப்பெற்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 14 மனுக்கள் வரப்பெற்றன.
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.80 லட்சம் மதிப்பில் செயற்கை கை, செயற்கை கால்களும், தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் சாா்பில் பத்தாம் வகுப்பு முடித்த 2 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ. 1,000 மும், விபத்து மரணம், இயற்கை மரணம் அடைந்த 2 நபா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5.20 லட்சம் என மொத்தம் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வழங்கல் நல அலுவலா் கணேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா. மகிழ்நன், பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.