மணப்பாறை அருகே வேன் கவிழ்ந்து 20 போ் காயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திங்கள்கிழமை தனியாா் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூரில் கிராமத்தில் ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் வேனில் திங்கள்கிழமை மாலை பணிமுடிந்து 30 தொழிலாளா்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனா்.

வேன் இளங்காகுறிச்சி - காவல்காரன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநரான கெளதம், வாகனத்தை திருப்பிய நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். அவா்கள் அவசர ஊா்தி மூலம் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.