மணப்பாறை : `ரேஷன் கடை வேலை; எம்.எல்.ஏ பெயரைச் சொல்லி ரூ.6 லட்சம் பணம் வசூல் - எம்.எல்.ஏ சொல்வதென்ன?
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு கைகாட்டி பகுதியினைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர், அருகேயுள்ள பிராம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நியாய விலைக் கடை உதவியாளர் பணி வாங்கி தர மணப்பாறை எம்.எல்.ஏ ப.அப்துல் சமது மற்றும் அவரது உதவியாளர் காதர்மொய்தீன் ஆகியோரிடம் பேசியிருப்பதாகவும், அந்த பணிக்கு ரூ. 9 லட்சம் பெறப்பட்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறார்.
மேலும், தான் ரூ. 6 லட்சத்திற்கு பேசி முடித்திருப்பதாகவும், 98 சதவிகிதம் வேலை உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் பேசி 2 தவணையாக தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் பணத்தை கட்டுக்கட்டாக வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இது, மணப்பாறையில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை எம்.எல்.ஏ ப.அப்துல்சமது மறுப்பு தெரிவித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ”எனது மணப்பாறை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மணிவேல் என்பவரிடம் நியாய விலை கடைகளில் பணி நியமனம் வாங்கி தருவதாக எனது பெயரை பயன்படுத்தி பணம் வாங்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அந்த வீடியோவில் உள்ள நபர் மீது வளநாடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையை வலியுறுத்தி இருக்கிறேன். மேலும், எனது பெயரை பயன்படுத்தி இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை யாரும் நம்ப வேண்டாம். அப்படி, யாராவது உங்களை அணுகினால் உடனே என் கவனத்திற்கு கொண்டுவருமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வளநாடு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.