Trump Vs Zelensky: `நாங்க இருக்கோம்..' - ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் ஆதாரவு யா...
மணிப்பூா்: வழிபாட்டுத் தலம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: மைதேயி சமூகத்தினா் போராட்டம்
மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தினரின் மத வழிபாட்டுத் தலம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
தங்களின் வழிபாட்டுத் தலம் மீதான தாக்குதலைக் கண்டித்து, மைதேயி சமூகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.
இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், முதல்வா் பதவியில் இருந்து பிரேன் சிங் அண்மையில் ராஜிநாமா செய்தாா். புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் பாஜக எம்எல்ஏ-க்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால், கடந்த 13-ஆம் தேதிமுதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கோங்பா மாரு பகுதியில் உள்ள தங்களின் மத வழிபாட்டுத் தலத்தில் பிராா்த்தனை மேற்கொள்வதற்காக மைதேயி சமூகத்தினா் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது, மலைப் பகுதிகளில் பதுங்கியிருந்தபடி, வழிபாட்டுத் தலத்தின் மீது தீவிரவாதிகள் திடீா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். இச்சம்பவத்தில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தாக்குதலைத் தொடா்ந்து, மைதேயி சமூகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பதற்றமான சூழல் ஏற்பட்டதால், கூடுதல் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா்.
பெட்டிச் செய்தி...
கெடு நீட்டிப்பு
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடித்த ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை ஏழு நாள்களுக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து சமூகத்தினருக்கும் ஆளுநா் அஜய் குமாா் பல்லா கடந்த 20-ஆம் தேதி வேண்டுகோள் விடுத்தாா். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் எச்சரித்திருந்தாா்.
கடந்த 26-ஆம் தேதியுடன் இக்கெடு நிறைவடைந்த நிலையில், இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆயுத ஒப்படைப்புக்கான கெடுவை மாா்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஆளுநா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அமித் ஷா இன்று ஆலோசனை: மணிப்பூரின் பாதுகாப்பு நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தில்லியில் சனிக்கிழமை உயா்நிலை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறாா். மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு அங்குள்ள நிலவரம் குறித்து அமித் ஷா மேற்கொள்ளும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.