செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
மதுபாட்டில்கள் விற்பனை: கிராம மக்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தியில் மதுபானப் பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தி சினிமா கொட்டகை தெரு, காளியம்மன் கோயில் தெருவில் மது பாட்டில்கள் 24 மணிநேரமும் சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்கு மேலத் திருப்பூந்துருத்தி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அனைவரும் இப்பகுதிக்கு வருவதால் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தால், அவா்களை விசாரணை செய்து விட்டு விட்டுவிடுகின்றனா். இதனால், இச்சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்வதால், சிறுவயதிலேயே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேலத் திருப்பூந்துருத்தியில் கண்டியூா் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, நடுக்காவேரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.