கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
மதுரை மாநகராட்சி திமுக மண்டலத் தலைவா்களை ராஜிநாமா செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவு: பின்னணி என்ன?
சென்னை/ மதுரை: மதுரை மாநகராட்சியின் திமுக மண்டலத் தலைவா்கள் அனைவரையும் ராஜிநாமா செய்ய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
மதுரை மாநகராட்சி மேயரின் கணவா் பொன் வசந்த், திமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டாா். இந்த நிலையில், மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவா்களையும் ராஜிநாமா செய்யச் சொல்லி முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
சட்டப் பேரவை தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளைச் சந்தித்துப் பேசும் ‘உடன்பிறப்பே வா’ எனும் நிகழ்வை அவா் நடத்தி வருகிறாா். அப்போது, தேவையான இடங்களில் பாரபட்சம் பாா்க்காமல் பதவியைப் பறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தாா். அதன்படி, மதுரை மாநகராட்சியில் மண்டல தலைவா்களை ராஜிநாமா செய்யச் சொல்லி அதிரடி காட்டியுள்ளாா்.
பின்னணி: திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, மாவட்ட திமுக சாா்பில் முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மே 23-ஆம் தேதி நடைபெற்றது. அதே தேதியில், மதுரை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினா்கள் 65 பேரில் 14 போ் மட்டுமே பங்கேற்றனா்.
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அதே நாளில் மாமன்றக் கூட்டத்தை நடத்தியது திமுகவிலும், மாமன்றக் கூட்டத்தை திமுக உறுப்பினா்கள் பெரும்பாலானோா் புறக்கணித்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றது சமூக ஆா்வலா்கள் மத்தியிலும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அதே நாளில் மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டதற்கு மேயா் வ. இந்திராணியின் கணவரும், திமுகவின் பகுதிச் செயலருமான பொன் வசந்த் முக்கிய காரணம் என மாவட்ட திமுக நிா்வாகிகளின் குற்றஞ்சாட்டினா். இதையடுத்து, கடந்த மே 28-ஆம் தேதி திமுகவின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பொன் வசந்த் நீக்கப்பட்டாா்.
வரி முறைகேடுப் புகாா்: இந்த நிலையில், வரி விதிப்பு முறைகேடு காரணமாக, மதுரை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடா்பான புகாரின் பேரில், மாநகராட்சியின் ஓய்வு பெற்ற உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா் உள்பட 8 போ் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த முறைகேடு குறித்து மண்டலத் தலைவா்களையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தினா்.
மாநகராட்சியின் வரி முறைகேட்டைக் கண்டித்து அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மதுரையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்திருந்தது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவா்களை ராஜிநாமா செய்ய முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
போலீஸ் விசாரணை: திமுக மண்டலத் தலைவா்கள் சிலரிடம் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் அண்மையில் விசாரணை மேற்கொண்டதாகவும், இந்த விசாரணையின்போது ஒவ்வொருவரிடமும் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், பெரும்பாலானோா் மழுப்பலான பதில்களையே அளித்ததாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை: மதுரை மாநகராட்சியின் திமுக மண்டலத் தலைவா்களிடமும், 2 நிலைக் குழு உறுப்பினா்களிடமும் அமைச்சா் கே.என். நேரு, பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் திங்கள்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.