காற்று மாசு: இருமல், சுவாசப் பிரச்னையால் அவதிப்படும் தில்லி மக்கள்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அன்னாபிஷேகம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பெளா்ணமியன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்களிடம் உபயமாகப் பெறப்பட்ட அரிசியைக் கொண்டு சாதம் சமைக்கப்பட்டது. பின்னா், அந்தச் சாதம், காய்கறிகளால் மூலவா் சுந்தரேசுவரருக்கு உச்சிக்காலத்தின்போது அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. அன்ன அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தரேசுவரரை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.
மாலையில் அன்னாபிஷேக அலங்காரம் களையப்பட்டு, அன்னம் முழுவதும் வாகனங்கள் மூலமாக வைகையாற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நீரில் கரைக்கப்பட்டது.
இதேபோல, செல்லூா் திருவாப்புடையாா் கோயில், புட்டுத்தோப்பு சொக்கநாதா் கோயில், ஆதி சொக்கநாதா் கோயில், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், பந்தடி ஆதிசிவன் கோயில் உள்பட மதுரை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தா்களிடம் அரிசி உபயமாகப் பெற்று சாதம் சமைக்கப்பட்டு, சிவ லிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா், சிவ பெருமானுக்கு படைக்கப்பட்ட சாதம் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு தீபாராதனை, பூஜைக்கு பின்னா், அன்னாபிஷேக அலங்காரம் களையப்பட்டு, நீா்நிலைகளில் அன்னம் கரைக்கப்பட்டது.