போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்...
மதுரை: 10-ஆம் வகுப்பு படித்து வந்த துப்பாக்கிச் சுடும் வீரர் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை
மதுரை மாநகர எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் - கிருத்திகா தம்பதியின் மூத்த மகன் யுவநவநீதன், தனியார்ப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுவயதிலிருந்தே துப்பாக்கிச் சுடுதலில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களைப் பெற்று வந்துள்ள யுவநவநீதன், மதுரை ரைபிள் கிளப்பில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
சமீபத்தில் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகிய நிலையில் கடந்த சில நாட்களாகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் பயிற்சி முடித்துவிட்டு பயிற்சிக்கான 'ஏர் கன்னை' வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.
நேற்று பெற்றோர் கோயிலுக்குச் சென்றுவிட்டதால் யுவ நவநீதன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தாயார் வீட்டிற்குத் திரும்பி வந்து படுத்தபடி இருந்த நவநீதனை அருகே சென்று பார்த்தபோது மூச்சின்றி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் கிடந்த ஏர் கன் மூலம் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து புதூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து யுவ நவநீதனின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வந்த யுவ நவநீதன் உயிரிழந்த சம்பவம் பெற்றோரையும், சக வீரர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.