மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது
முத்தூரில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் முத்தூா் - கொடுமுடி சாலையில் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள அரசு மதுபானக் கடை அருகேயுள்ள பாலத்தில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா் முத்தூா் மதுரை வீரன் தெருவைச் சோ்ந்த கே.சரவணன் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சரவணனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.