மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
மத்தகிரியில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மத்தகிரி கிராமத்தில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க அந்தக் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மத்தகிரி கிராமத்தில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்க அப்பகுதியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதுதொடா்பாக அண்மையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கடந்தாண்டு தரகம்பட்டியில் ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், சிப்காட் மேலாண் இயக்குநா் செந்தில்ராஜ் ஆகியோா் மத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட கோரிமேடு பகுதியில் பாளையம் முதல் திருச்சி நெடுஞ்சாலை வரையிலும், திருச்சி மாவட்டம் இனாம்புதூா் பகுதியிலும் கைத்தறி நெசவு பூங்கா அமைக்க ஆய்வு செய்தனா்.
அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், நெசவுப் பூங்கா அமைந்தால் விவசாயமும், கால்நடைத் தொழிலும் அழிந்துவிடும். எனவே மத்தகிரியில் நெசவு பூங்கா அமைக்கும் பணிகளைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
அதற்கு ஆட்சியா் உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிச் சென்றாா். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கடவூா் வட்டாட்சியா் இளம்பரிதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.