மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி
தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை செப்.6}ஆம் தேதி தொலைபேசியில் அழைத்த மோசடி நபர், தன்னை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்று அறிமுகம் செய்துகொண்டு, சில உதவிகளைக் கேட்டுள்ளார்.
அதன் பிறகு, அந்த உதவி தொடர்பாக மீண்டும் தொலைபேசி அழைப்பு எதுவும் வராததால், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தொலைபேசியில் அழைத்து, ஏற்கெனவே செய்த தொலைபேசி அழைப்பு பற்றிக் கேட்டுள்ளார். ஆனால், ஆளுநரை முன்னதாக தொலைபேசியில் அழைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
இதை தொடர்ந்து, பெங்களூரு காவல் துணை ஆணையரை அழைத்து, இது குறித்து விசாரிக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார்.
இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயரில் மோசடியான தொலைபேசி அழைப்பு கொல்கத்தாவிலிருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மோசடி நபரை போலீஸார் தேடி வருவதாக கர்நாடக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.