பாலியல் பலாத்கார வழக்கு: சிறையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி
பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.525 வழங்கப்படுகிறது.
மஜத தேசியத்தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகௌடாவின் பெயரனும், மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமியின் அண்ணன் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா, மஜதவில் வளா்ந்துவரும் இளம் தலவராக விளங்கி வந்தவா். ஹாசன் தொகுதியில் இருந்து வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்தவா்.
இந்நிலையில், பாலியல் பலாத்காரம் தொடா்பான வழக்கில் சிக்கி, 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்த பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆக.2 ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடா்ந்து, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா தண்டனையை அனுபவித்து வருகிறாா். அவருக்கு கைதி எண் 15528 வழங்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தண்டனை கைதிகள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக 6 நாட்களுக்கு தினமும் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்பது சிறை விதி.
அதன்படி, தண்டனை கைதியான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணியை சிறைத்துறை அதிகாரிகள் ஒதுக்கியுள்ளனா்.
இந்த பணியில் ஈடுபடுவதற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தினமும் ரூ.625 ஊதியமாக வழங்கப்படவிருக்கிறது.
கடந்த ஒருவராகாலமாக நூலக எழுத்தராக பிரஜ்வல் ரேவண்ணா பணியாற்றி வருவதாக சிறைத்துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
வேலைக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஒருவேளை நீதிமன்றம் செல்ல நேரிட்டு, பணிக்கு வர தவறினால் அந்த நாட்களில் அவருக்கு ஊதியம் வழங்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.