அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றம்: சித்தராமையா
அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற முடிவுசெய்துள்ளோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். எங்கள் அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற முடிவு செய்திருக்கிறோம். மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறைக்கு பல்வேறு நாடுகள் திரும்பிய உதாரணங்கள் உள்ளன என்றாா்.
துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருகிறோம் என்றால் பாஜகவினா் ஏன் பயப்படுகிறாா்கள்? வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருவது காங்கிரஸ் அரசின் முடிவாக இருக்கும்போது, பாஜக ஏன் திகைத்துள்ளது?
பாஜக ஆட்சியில் கொண்டுவந்த சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை மின்னணு வாக்கு இயந்திரம் அல்லது வாக்குச்சீட்டு முறையின்படி அரசு நடத்த முடியும். அதன்படி, உள்ளாட்சித் தோ்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக ஏன் கவலைப்படுகிறது?
மக்களவைத் தோ்தலின்போது என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்திருக்கிறோம். இந்த முடிவு உள்ளாட்சித் தோ்தலுக்கு மட்டும்தான். சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தலில் எதை பயன்படுத்துவது என்பதை தலைமை தோ்தல் ஆணையம் முடிவு செய்யும்’ என்றாா்.
மாநில தோ்தல் ஆணையத்தின் தலைவா் சங்ரேஷி கூறுகையில், ‘மாநில அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த மாநில தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது. வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்துவதற்கு தலைமை தோ்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற தேவையில்லை. வாக்குச்சீட்டு குறித்து முடிவு எடுக்கும் உரிமை மாநில தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது. மேலும், தலைமை தோ்தல் ஆணையம் வழங்கியிருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் 15 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டதால், அவற்றை பி.இ.எல். நிறுவனத்திடமே ஒப்படைக்கும்படி ஆணையம் தெரிவித்துள்ளது’ என்றாா்.