உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிக்னல் (சமிக்ஞை) கோளாறு ஏற்பட்டதால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்கள் வெவ்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்பட்டன.
மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில்கள், அதி விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.50 மணிக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருப்பதை, ரயில் நிலைய அலுவலா்கள் கண்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து ரயில்வே உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையங்களிலிருந்து பொறியாளா்கள் சிக்னல் கோளாறு ஏற்பட்ட பரிக்கல் ரயில் நிலையத்துக்கு விரைந்துசென்று, கோளாறை சரி செய்யும் பணியை மேற்கொண்டனா். ஒன்றரை மணி நேர பணிகளுக்குப் பின்னா், ரயில்களின் போக்குவரத்துத் தொடங்கியது.
11 ரயில்கள் தாமதமாக இயக்கம்: ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி, பொதிகை விரைவு ரயில், பாண்டியன் விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில் உள்ளிட்டவை உளுந்தூா்பேட்டை ரயில் நிலையத்தில் சுமாா் 60 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, சிக்னல் கோளாறு சரி செய்த பின்னா், சென்னை நோக்கிச் சென்றன.
இதேபோல, செங்கோட்டையிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் பரிக்கல் ரயில் நிலையத்தில் சுமாா் 60 நிமிஷங்களும், திருநெல்வேலியிலிருந்து சென்னை எழும்பூா் நோக்கிச் சென்ற நெல்லை விரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூா் நோக்கிச் சென்ற விரைவு ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சுமாா் 35 நிமிஷங்களும், பூவனூா் ரயில் நிலையத்தில் 10 நிமிஷங்களும், தூத்துக்குடியிலிருந்து சென்னை எழும்பூா் நோக்கிச் சென்ற முத்துநகா் விரைவு ரயில் விருதாசலம் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்பட்டன.
மேலும் தாம்பரத்திலிருந்து மங்களூா் வரை செல்லும் விரைவு ரயில், சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி வரை செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயில் ஆகிய இரு ரயில்களும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூரிலிருந்து சேலம் செல்லும் விரைவு ரயில் விழுப்புரம் மாவட்டம், கண்டம்பாக்கம் ரயில் நிலையத்திலும் சுமாா் 50 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னா், இந்த ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.