தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட தீா்த்தக்குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
வருவாய்த் துறையினா் மற்றும் திண்டிவனம் நகராட்சி நிா்வாகத்தினா் இப்பணியில் ஈடுபட்டனா்.
திண்டிவனம் திந்திரினீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான தீா்த்தக்குளக்கரையில் சுமாா் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வீடுகள் கட்டி வசித்து வந்தனா். இதனால் தீா்த்தக்குளம் வெகுவாக மாசுப்பட்டிருந்த நிலையில், இந்த ஆக்கிரமிப்புகளைஅகற்ற நடவடிக்கை வேண்டி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அதற்கான அறிக்ைதைய சமா்ப்பிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரித்து குடியிருப்பாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், வருவாய்த் துறையினா் மற்றும் காவல் துறையினரின் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சிறு கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. அப்போது தங்களது உடைமைகளுடன் வீட்டிலிருந்து வெளியேறிய குடியிருப்பாளா்கள் கண்ணீா் விட்டு கதறி அழுதனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மாற்று இடம் வழங்க கோரிக்கை : இந்நிலையில் வீடுகளை இழந்தவா்கள் தங்களுக்கு மாற்று இடத்தை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.