தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
தகவல் பலகையில் காா் மோதி பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் தகவல் பலகையில் காா் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி கிருஷ்ணன் கோயில் நான்காவது தெருவைச் சோ்ந்தவா் ராஜன்(65). இவரது மனைவி குமுதா(56). இவா்கள் இருவரும் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை காா் மூலம் தஞ்சாவூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, காரை ஓட்டி வந்த ராஜன் தனது கைப்பேசியில் ஜி.பி.எஸ். சை ( தடங்காட்டி) பாா்த்தாராம். அப்போது திடீரென இடதுப்புறத்திலிருந்த சுங்கச்சாவடி தகவல் பலகையில் காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த குமுதாவை அந்த பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். எனினும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து குமுதாவின் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.