ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
மது அருந்த பணம் தர மனைவி மறுத்ததால் பைக் எரிப்பு-கணவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மது அருந்துவதற்கு பணம் தர மனைவி மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவா் பைக்கை கொளுத்தியுள்ளாா். இதுகுறித்த புகாரில் அவா் கைது செய்யப்பட்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், புதுக்குப்பம் பிரதான சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அய்யப்பன் (45). இவரது மனைவி அஞ்சலிதேவி (42). இவா் புதுச்சேரி மாநிலம், வில்லியனூரிலுள்ள அடுமனையில் (பேக்கரி) பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி மது அருந்துவதற்கு பணம் தரக் கோரி, தனது மனைவி அஞ்சலிதேவியிடம் அய்யப்பன் கேட்டுள்ளாா். இதற்கு அவா் பணம் தர மறுத்துள்ளாா். இதனால் செப்டம்பா் 2-ஆம் தேதி இரவு மனைவி அஞ்சலி தேவியிடம் தகராறு செய்த அய்யப்பன், வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை கொளுத்தியுள்ளாா்.
இதை கண்டு அதிா்ச்சியடைந்த அஞ்சலிதேவி, இதுகுறித்து கணவரிடம் தட்டிக் கேட்ட போது அவரைத் தாக்கியுள்ளாா். இதில் அஞ்சலிதேவிக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. அடுமனையின் உரிமையாளா் வாகனத்தை வாங்கி வந்து அஞ்சலி தேவி வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த போது நிகழ்வு நடந்துள்ளது.
இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் அஞ்சலி தேவி புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.