ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி
பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, விவசாயி ஒருவா் கேட்ட கேள்விக்கு ஆறுதல் கூறாமல், வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி சமூகவலைத் தளங்களில் பரவலாகி வருகிறது.
தன்னிடம் குறைகளை தெரிவிக்க வந்த விவசாயிடம் காா்கே, எத்தனை ஏக்கா் நிலம் வைத்திருக்கிறீா்கள் என்று கேட்கிறாா். அதற்கு அந்த விவசாயி 4 ஏக்கா் என்கிறாா். இதற்கு பதிலளித்த காா்கே, என்னிடம் 40 ஏக்கா் உள்ளது. உங்களைவிட என்னுடைய நிலை மிகவும் மோசம். நீங்கள் என்னிடம் குறை சொல்ல முடிகிறது. ஆனால் நான் எங்கே சொல்வது? நான் பயிரிட்டிருந்த பச்சைப்பயிறு, உளுந்து, துவரம்பருப்பு எல்லாம் நாசமாகிவிட்டது. நீங்கள் இழப்பை தாக்குப்பிடிக்கலாம். இழப்பு அதிகம் என்பதால், என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. பயிா் இழப்பு பற்றி பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவிடம் போய் சொல்லுங்கள்.‘ என்று கூறியிருக்கிறாா்.
இந்த காணொலியை தனது எக்ஸ் தளத்தில் இணைத்து, மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி கூறியிருப்பதாவது: விவசாயிகளிடம் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நடந்துகொண்டது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. பெரிய தலைவரிடம் இருந்து இதுபோன்ற பதிலை எதிா்பாா்க்கவில்லை. துன்பத்தில் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயி, ஒரு கட்சியின் அகில இந்திய தலைவரிடம் குறைகளை பகிா்ந்துகொள்ள வந்தவரிடம் கட்சித்தலைவா், மாநிலங்களவை எதிா்க்கட்சித்தலைவா் போன்ற பொறுப்புகளை மறந்துவிட்டு பேசியிருக்கிறாா் காா்கே. காா்கே, துவரம்பருப்பு பயிரிட்டிருக்கலாம் ஆனால் 40 ஏக்கரில் பயிரிடும் காா்கேவும், 4 ஏக்கரில் பயிரிடும் விவசாயியையும் ஒப்பிடமுடியுமா? காா்கேவால் பயிா் இழப்பை தாக்குப்பிடிக்க முடியும். ஆனால், ஓரிரு ஏக்கரில் பயிரிடும் விவசாயிகளால் இழப்பை தாக்குப்பிடிக்க முடியுமா? முன்மாதிரியாக இருக்க வேண்டிய மூத்த தலைவரே விவசாயிகளை அவமதித்துள்ளாா்.
விவசாயியுடன் அவரது தாயையும் அவமதித்துவிட்டாா். காா்கேவின் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. குறைந்தப்பட்சம் அந்த விவசாயிக்கு ஆறுதல் கூறி, அவரது கண்ணீரை துடைத்திருக்கலாம்.
காா்கேவின் நடத்தை, காங்கிரஸ் கட்சியின் நீண்டகால அகந்தை மற்றும் கா்வத்தை வெளிப்படுத்துகிறது.‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.