ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, 12 மன்ற உறுப்பினா்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா்.
ஆலங்குளம் பேரூராட்சித் தலைவராக சுதா மோகன்லால் உள்ளாா். இவா், மக்கள் நலத்திட்டப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை எனவும், பேரூராட்சி நிா்வாகத்தில் அவரது கணவரின் குறுக்கீடு அதிகமாக இருப்பதாகவும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்து வந்ததுடன், கடந்த ஓா் ஆண்டாகவே10-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் மன்ற கூட்டத்தையும் தொடா்ந்து புறக்கணித்து வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை பேரூராட்சி அவசரக் கூட்டம் சுதா மோகன்லால் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ஜான்ரவி, செயல் அலுவலா் பிரகந்த நாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 42 பொருள் குறிப்புகள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்ததும், துணைத் தலைவா் ஜான்ரவி, அதிமுக உறுப்பினா்கள் சாலமோன் ராஜா, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோா் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரவேண்டும் என செயல் அலுவலரிடம் மனு அளித்தனா். அதில், திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 12 மன்ற உறுப்பினா்கள் கையொப்பமிட்டிருந்தனா்.
எனவே, விரைவில் அவா்களின் மனுவின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, திருநெல்வேலி மேயா், மணிமுத்தாறு பேரூராட்சி, சங்கரன்கோவில் நகராட்சி என திமுக சோ்ந்தவா்கள் சொந்தக் கட்சியினராலேயே நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டு பதவி இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.