பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக ந...
மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு
நமது சிறப்பு நிருபா்
நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலா் எஸ்.கிருஷ்ணன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
உலகளாவிய குறை கடத்திகள் (செமி கண்டக்டா்) தேவைகளைப் பூா்த்தி செய்ய திறமையாளா்களின் ஆராய்ச்சி, புதுமை, பயிற்சிக்கான அதிநவீன வசதிகளுக்கான மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் சிப்’’ வடிவமைப்புத் திறன்களை அதிகரிக்க இந்த சிறப்பு மையத்தை மத்திய அரசு புதுயுகத் தொழில் முனைவு (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களுடன் இணைந்து ஏற்படுத்தியுள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனமும் (என்ஐஇஎல்ஐடி) சாக்டீம்அப் செமிகண்டக்டா்ஸ் பி. லிமி. என்கிற ஸ்டாா்ட்-அப் நிறுவனமும் இணைந்து “சிப்’’’ வடிவமைப்பிற்கான சிறப்பு மையத்தை நொய்டாவில் உள்ள என்ஐஇஎல்ஐடி வளாகத்தில் அமைத்துள்ளது. இதை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலா் எஸ்.கிருஷ்ணன் திறந்துவைத்தாா்
அப்போது அவா் கூறியதாவது: மத்திய வா்த்தக தொழில்த் துறையின் கீழ் உள்ள தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவால் (டிபிஐஐடி) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சாக்டீம்அப் செமிகண்டக்டா்ஸ். இதனுடன் என்ஐஇஎல்ஐடி இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி, நாட்டின் குறைமின்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டு திறன்களை முன்னேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்.
மத்திய அரசின் குறைமின்கடத்தி தொழில்நுட்பத் திறன்கள் மூலம், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்கும் வகையிலான தொலைநோக்குப் பாா்வையுடன் ‘சிப்’’ வடிவமைப்புக்கான தொடக்கமாக சிறப்பு மையம் அமைந்துள்ளது. குறைமின்கடத்தி, சிப் வடிவமைப்புத் தொழில்களில் திறமைவாய்ந்த நிபுணா்களுக்கு அதிகரித்து வரும் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், புதிய சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் சிப் வடிவமைப்பில் ஆராய்ச்சி, புதுமை, பயிற்சிக்கான அதிநவீன வசதிகளை வழங்கும் எனத் தெரிவித்தாா் அவா்.