மத்திய அரசைக் கண்டித்து திமுக அணி இன்று ஆா்ப்பாட்டம்
சென்னை: தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அணியிலுள்ள கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது குறித்து அந்தக் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:
தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை மாநில கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மிரட்டுகிறாா். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தித் திணிப்புக்கான முன்னெடுப்பு போன்ற செயல்பாடுகளால் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
தமிழா்கள் தனித்துவமானவா்களாக இருப்பதும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயா்ந்திருப்பதும் மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல் ரீதியாகப் பாஜகவை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது. வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்.
அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மத்திய அரசைக் கண்டித்து முதல்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை திமுக பொதுச் செயலா் துரைமுருகன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவா் கே.எம்.காதா்மொகிதீன், விசிக தலைவா் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலா் அருணாசலம், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் இணைந்து வெளியிட்டுள்ளனா்.