சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
மத்திய உள்துறைச் செயலரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு
மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகனின் பதவிக்காலத்தை 2026, ஆக.22 வரை நீட்டித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மத்திய உள்துறைச் செயலராக இருந்த அஜய் பல்லா கடந்த ஆண்டு ஆக.22-இல் பணி ஓய்வுபெற்றதையடுத்து அந்தப் பதவிக்கு கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு 2027-இல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல் 2026, மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் இந்தியாவில் முழுவதுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் சூளுரைத்துள்ளாா். இந்தச் சூழலில் கோவிந்த் மோகனின் பதவிக்காலத்தை 2026, ஆக.22 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் வழங்கியது. இதற்கான ஆணையை மத்திய பணியாளா்அமைச்சகம் பிறப்பித்தது.
இதன்மூலம் மத்திய உள்துறைச் செயலராக கோவிந்த் மோகன் 2 ஆண்டுகள் பதவி வகிக்கவுள்ளாா்.
1989, சிக்கிம் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் உள்துறைச் செயலராக பதவியேற்கும் முன் மத்திய கலாசார செயலராக பதவி வகித்தாா்.
கரோனா பெருந்தொற்றின்போது மாநிலங்களின் நிலவரங்களைக் கண்காணிப்பதில் மத்திய அரசின் முக்கிய அதிகாரியாக கோவிந்த் மோகன் திகழ்ந்தாா்.